அமுதகலசம்

அமுதகலசம்

Saturday, 7 September 2013

அணுசக்தி

முதலில் அணு என்றால் என்ன, அணு சக்தி என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்:
ஒரு பொருளை உடைத்துக் கொண்டே சென்றால் ஒரு கட்டத்திற்க்கு மேல் உடைக்கும் போது அது இனிமேலும் அந்த குறிப்பிட்ட பொருள் என்பதற்க்கான பண்புகளை இழக்கும். அந்த கடைசி அளவிலான பொருளே அந்த குறிப்பிட்ட தனிமத்தின் அணு என்று புரிந்து கொள்ளலாம் #1. அணுவை உடைக்கும் போதோ அல்லது இணைக்கும் போது சக்தி உருவாகிறது. இதனை ஆங்கிலத்தில் Nuclear Fission, Nuclear Fusion என்று குறிப்பிடுகிறார்கள். இதில் உடைப்பதன் மூலம் சக்தி உருவாக்கும்(fission) தொழில் நுட்பமே பரவலாக பயன்பாட்டில் உள்ளது. இணைவின் மூலமான தொழில்நுட்பம் வெகு சில நாடுகளிடமே உள்ளது (ஹைட்ரஜன் குண்டுகள்).
அணு உடைப்பின் மூலம் அதிக சக்தி பெறுவதற்க்கு அந்த குறிப்பிட்ட அணுவின் எடை அதிகமாக இருத்தல் வேண்டும். ஏனெனில் எடை அதிகம் கொண்ட அணுவின் பிணைப்பு விசை(Binding energy) அதிகமாக இருக்கும். எனவே இந்த அணு உடைக்கப்படும் போது இந்த பிணைப்பு விசை சக்தியாக வெளியிடப்படுகிறது #2. அந்த வகையில் அதிகமான அணு எடை கொண்ட தனிமங்களே அணு உடைப்பிற்கு பயன்படுத்தப் படுகின்றன. இது போல அணு எடை அதிகமான தனிமங்களை கதிரியக்க தனிமங்கள் என்கிறோம். இவை யுரேனியம், தோரியம், புளுட்டோனியம் இன்னபிற. இவற்றில் யுரேனியமே எடை அதிகமுள்ளது. எனவே யுரெனியத்திலிருந்துதான் அணு சக்தி பெரும்பாலும் பெறப்படுகிறது.
ஒரு தனிமம் அணு உடைப்பிற்கு தகுதியானதா என்பதை முடிவு செய்வதில் அந்த தனிமத்தின் அணு உடைப்பு ஐசோடோப்பு பண்பு (Fissile Isotope) முக்கிய பங்கு ஆற்றுகிறது. எடுத்துக்காட்டுக்கு யுரேனியம் அணு பரவலாக u238 என்ற வடிவில்தான் கிடைக்கிறது. ஆனால் U235 என்கிற வடிவம்தான் அணு உடைப்பு ஐசோடோப்பு பண்பு கொண்டதாக இருக்கிறது. இந்த பண்பு கொண்ட அணுதான் நீடித்த அணு உடைப்பு சங்கிலி விளைவை ஏற்படுத்தும்(Sustained Chain reaction). இது நடந்தால்தான் யுரேனியம் அணுக்கள் அடுத்தடுத்து வெடித்து சக்தி அபரிமிதமாக கிடைக்கும் #3. இதில் 235, 238 என்பவை அணு எடையைக் குறிக்கின்றன.
ஐசோடோப் என்றால் என்ன?#4. ஐசோடோப்பு குறித்து பேசும் முன்பு அணு எண், அணு எடை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு அணுவின் அணு எண்தான் அது எந்த தனிமம் என்பதை குறிக்கிறது. அணு எண் என்பது ஒரு அணுவில் உள்ள நேர்மின் துகள்களை குறிக்கிறது(எதிர் நேர் மின் துகள்கள் அணுவில் சமமாகவே இருக்கும்)#5. அணுவின் மையப்பகுதியான நியுக்ளியசில் புரோட்டானும்(நேர்மின்), நிய்ட்ரானும் இருக்கும், இது தவிர்த்து எல்க்ட்ரான்(எதிர்மின்) நியுக்ளியசுக்கு வெளியே சுற்றி வரும். அணு எடை என்பது நியூக்ளியசில் உள்ள நேர்மின் துகள்(புரோட்டான்), நியுட்ரானின் எண்ணிக்கையாகும் #6. ஐசோடோப் என்பது வெவ்வேறு அணு எடை கொண்ட ஆனால் ஒரே அணு எண்ணை உடைய அணுக்கள். அதாவது ஒரே தனிமத்தின் வெவ்வேறு அணு எடை கொண்ட அணுக்களே ஐசோடோப்புகள். U235 என்ற அணு எடை கொண்ட யுரேனியம் ஐசோடோப்பின் நீயுக்ளியசில் அணுச் சமன்பாடு குலைக்கப்பட்டுள்ளதால் இதனை உடைப்பது எளிது, இதிலிருந்து உருவாகும் சக்தி சுற்றியுள்ள பிற U235 அணுக்களை உடைப்பதன் மூலம் நீடித்த சங்கிலி விளைவை உருவாக்குகிறது. அணு, அணு சக்தி குறித்த அடிப்படை விஞ்ஞானம் இதுதான். அணு சக்தியின் நன்மை தீமை குறித்து இப்போது பார்க்கலாம்.
அணு சக்தியின் நன்மை, தீமை:
அணு வெடிப்பின் மூலம் சக்தி இரு வழிகளில் வெளிப்படுகிறது. ஒன்று கைனடிக் சக்தி(சுழற்சி விசை என்ற மொழிபெயர்ப்பு சரியா?) இன்னொன்று கதிரியக்கமாக வெளிப்படுகிறது. இந்த கதிரியக்கம் தன்னைச் சுற்றியுள்ள பொருட்களின் அணுக்களையும் பாதித்து கதிரியக்க தன்மைவாய்ந்ததாக மாற்றி விடுகிறது. இப்படி உருவாகுபவை அணு உலைகளில் பயன்படுத்தும் கையுறை முதலான பொருட்களில் இருந்து அனைத்தும் அடங்கும். அணு உடைப்பிற்கு பிற்பாடு மிச்சமிருக்கும் கதிரியக்க பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள இந்த அனைத்துவிதமான பொருட்களையும் அணுக் கழிவுகள் என்று குறிப்பிடுகிறார்கள். விலை குறைவாக, வீரியமான முறையில் சக்தி கிடைக்கிறது, கார்பன் மாசுபாடு மிகக் குறைவு என்பது அணுவின் நன்மை எனில், அதனால் உருவாகும் இந்த கழிவுகள் மிக அபாயகாரமானதாக இருக்கின்றன#7.
பொதுவாக அணு உலைகள் தவிர்த்து பிற தொழிற்சாலை உற்பத்திகளில் குறிப்பாக, எண்ணெய் உற்பத்தி நிலையங்களில் மிக அதிகளவில் கதிரியக்க கழிவுகள் உருவாகின்றன. இவை மனிதனுக்கு அபாயகராமானவைதான் என்றாலும் இவை குறை சக்தி கதிரியக்க கழிவுகள்(LLW/ILW). அதாவது பிற தொழிற்சாலை கழிவுகள் போன்றதே இது. இப்படி சொல்வதன் அர்த்தம் இந்த கழிவுகள் குறித்து நாம் குறைத்து மதிப்பிடுவது என்பது அல்ல. இன்று மனித குலத்தை அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ள உலக வெப்பமடைதலுக்கு பின்னால் உள்ள அராஜக ஏகாதிபத்திய உற்பத்தி முறையை இந்த பிரச்சினைக்கும் காரணம். இவை நமது கடும் கண்டனத்திற்க்கும் எதிர்ப்பிற்கும் உள்ளாகும் விசயமாகவே உள்ளது. ஆயினும் ஒரு குற்றத்தை காரணம் காட்டி அதை விட பல மடங்கு பெரிய தவறை நியாயப்படுத்த முயலும் கயமைத்தனத்தை அம்பலப்படுத்தும் போது பெரிய தவறு உண்மையில் பெரிய தவறு என்பதையும் சேர்த்தே சொல்ல வேண்டியுள்ளது. ஏனேனில் HLW எனப்படும் அதி உயர் கதிரியக்க கழிவுகளில் அணு கழிவு மட்டும்தான் வருகிறது. இப்படி ஒரு வருடத்திற்க்கு உருவாகும் HLW கழிவுகள் 12,000 மெட்ரிக் டன். அதாவது நூறு இரண்டு அடுக்கு பேரூந்து நிறைய கழிவுகள் உருவாகின்றன.
அணு வெடிப்பின் மூலம் கதிரியக்க தன்மை வாய்ந்தவையாக வெளிவரும் அணுக்களின் கதிரியக்க வாழ்நாள் வேவ்வேறாக உள்ளது ஒரு எடுத்துக்காட்டுக்கு ஐயோடின் உப்பின் கதிரியக்கம் 8 நாட்களில் வடிந்துவிடுகிறது. ஆனால் யுரெனியம் வெடிப்பில் பயன்படுத்தப்படும் புளோட்டனியம்-239 கழிவு வாழ்நாள் பல நூறு-ஆயிரம் வருடங்கள் நீடித்திருக்கும் தன்மை வாய்ந்தது. இன்ன பிற கழிவுகளின் வாழ்நாள் பல நூறு மில்லியன் ஆண்டுகளுக்கும் மேல் நீடித்திருக்கும். இதுதான் அணுக் கழிவுகளை மிக அபாயகரமானதாக மாற்றுகிறது. ஆக, மனித சமுதாயத்தின் தொடர்பிலிருந்து, புவியின் உயிர் சூழலின் தொடர்பிலிருந்து இந்த அணுக் கழிவுகள் சுத்தமாக தனிமைப்படுத்தப்பட்டு பல நூறு-ஆயிரம்-மில்லியன் வருடங்கள் பாதுகாக்கப்பட வேண்டியிருக்கிறது. இப்படி பாதுகாப்பதற்க்கான தொழில் நுட்பம் எதுவும் இல்லை.
இது போன்ற கழிவுகளை ஒழித்துக்கட்டும் தொழில்நுட்பம் இன்றி அவற்றை மூட்டைக் கட்டி சேர்த்து வைக்கும் வேலையையே தற்போது செய்து வருகிறார்கள். அமெரிக்காவில் யுகா(Yucca) மலையை இப்படி அணு குப்பைக் கூடையாக மாற்ற முடிவு செய்துள்ளனர். இது கடும் எதிர்ப்புகளை கடந்து வந்து கொண்டிருக்கிறது. இப்படி சேமித்து வைக்கப்படுவதற்க்கும் இடங்கள் இன்றி தற்போது தவித்து வருகிறார்கள். இது அணுக் கழிவுகள் என்ற அபாயம் குறித்தானது.
இது ஒருபக்கம் என்றால் இந்த அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பது மிக அபாயகரமானதாக இருக்கிறது.
அணு எந்தளவுக்கு சக்தி கொண்டது எனில் நிலக்கரி, டிஎண்டி போன்றவற்றிலிருந்து பெருவதைவிட குறைந்தது 10மில்லியன் மடங்கு அதிகமான உபயோகிக்ககூடிய சக்தி அணுவிலிருந்து கிடைக்கிறது #8. ஹிரோசிமாவில் போடப்பட்ட அணு குண்டில் இருந்த யூரேனியம்-235 அணுவின் அளவு 60கிலோ இதில் 828 கிராம்தான் வெடித்தது, இதிலும் 6கிராம்தான் சக்தியாக உருமாறியது #9. இதிலிருந்து வெளிப்பட்ட சக்தியின் அளவு 13கிலோடன் டிஎண்டி வெடித்ததற்க்கு இணையாக இருந்தது. இதுவே ஒரு முழு நகரத்தை உடனடியாக அழித்தது எனில் இதன் சக்தியை புரிந்து கொள்ளலாம். இந்த தோல்விகரமான குண்டு வெடித்ததில் உடனடியாக 1.6 கிலோமீட்டர் சுற்றளவு அழிந்து விட்டது. இதனால் ஏற்பட்ட தீ 11.2 சதுர கிலோமிட்டர் பரப்பளவிற்கு பரவியது. ஹிரோசிமாவின் 90% நகரம் முற்றிலும் அழிந்தது #10. நாகசாகியில் வெடித்த குண்டு உருவாக்கிய காளான் புகையோ 18 கிலோமீட்டர் உயரம் இருந்தது.
நாகசாகியில் இடப்பட்ட புளூட்டோனியம்-239 குண்டு 6.4 கிலோதான். இதிலிருந்து வந்த சக்தி 21 கிலோடன் டிஎண்டிக்கு இணையாக இருந்தது. உருவான வெப்பம் 3900 டிகிரி செல்சியஸ், காற்றின் வேகம் 1005கிமீ/மணி. உடனடி அழிவு 1.6 கிமீ சுற்றளவிலும், இதனால் ஏற்பட்ட தீ 3 கிமீ சுற்றளவுக்கு பரவியது. இந்த இரண்டு குண்டு வெடிப்பிலும் உடனடியாக இறந்தவர்கள் லட்சங்களில். கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டு அடுத்த சில மாதங்களில் இதே அளவில் இறந்தார்கள். இது தவிர்த்து இதன் கதிரியக்க விளைவுகள் இன்று வரை கூட தொடர்கின்றன.
அணு விபத்துக்கள் என்றால் அவ்வப்போது சிறிய அளவில் இன்று வரை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பெரும்பாலும் உண்மை நிலவரங்களை யாரும் வெளியிடுவதில்லை. அணு விபத்துக்களில் முக்கியமானவை எனில் ரஸ்யாவில் நிகழ்ந்த செர்னோபிள்ளும், அமெரிக்காவில் நிகழ்ந்த மூன்று மைல் தீவு விபத்தும் உள்ளன. இதில் செர்னோபிள் விபத்தில் 56 பேர் சொச்சம் இதுவரை இறந்துள்ளனர். கதிரியக்க பின் விளைவுகள் குறித்து முரன்பாடான தகவல்கள் உலாவுகின்றன. மூன்று மைல் தீவு விபத்தில் யாரையுமே கதிரியக்கம் பாதிக்கவில்லை என்று சொல்கிறார்கள். ஆயினும் இந்த உலை மூடப்பட்டது. குறிப்பாக செர்னோபிள் விபத்தில் கதிரியக்க சாம்பல்களும், தூசுகளும் 1000மைல்களுக்கு அப்பால் ஐரோப்பிய நாடுகளில் காற்றில் பரவி கதிரியக்க பாதிப்பை ஏற்படுத்தும் அளவு இருந்தது. செர்னோபிள்லிருந்து சில கிமீ தள்ளியிருந்த பிரிபியாட் நகரமே மொத்தமாக காலி செய்யப்பட்டது. வெறும் கட்டங்களுடன் பேய் நகரமாக அது நிற்கிறது. செர்னோபிளில் வெடித்த அணு உலையை மறைக்கும் வகையில் ஒரு பெரிய சுவர் ஒன்று கட்டப்பட்டது. பிறகு அந்த வெடித்த அணு உலையில் அபாயகரமான கழிவுகள் இருப்பதை முன்னிட்டு தற்போது 105மீ உயரம், 200 மீ நீளத்தில், 257மீ அகலத்தில் ஒரு பெரிய வளைவு உலோக மூடி ஒன்றை தயாரித்து 2011ல் இந்த அணு உலையை மூடப் போகிறார்கள். இந்த இரண்டு விபத்துக்களும் அணு உலை குறித்த சர்வதேச கண்ணோட்டத்தை மாற்றியமைப்பதில் பெரும் பங்கு ஆற்றின. குறிப்பாக மேற்கு நாடுகள் புதிதாக அணு உலைகள் திறப்பதையே இத்துடன் நிறுத்திக் கொண்டன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அனைத்துமே தம்மிடம் ஏற்கனவே உள்ள அணு உலைகளின் வீரியத்தை அதிகப்படுத்தி தமது மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்து கொண்டனர் #11, #12.
அணுவின் நன்மை தீமைகள் குறித்து இங்கு பார்ப்பதன் முக்கியத்துவம் ஒன்று உள்ளது. விஞ்ஞானிகள் மனித குலத்தின் ஒட்டு மொத்த நன்மைக்காகவே அரிய பல கண்டுபிடிப்புகளை செய்கிறார்கள். ஆயினும் மனிதர்களிடையே இருக்கின்ற முரன்பாடுகளும், முதலாளித்துவ லாப வெறியும் அந்த கண்டுபிடிப்புகளை மனித குலத்திற்கே எதிராக பயன்படுத்தச் செய்து விடுகிறது. எய்ட்ஸை சோதனைச் சாலையில் உருவாக்கி தனது சொந்த நாட்டு மக்கள் மீதே பரிசோதித்த அமெரிக்க முதல் இன்று பரிசோதனைச் சாலை எலிகளாக அப்பாவி இந்தியா ஏழைகளை அரசு மருத்துவமனைகளில்(AIIMS Children killed in Medical trial) கொன்று குவிப்பது வரை இவர்களின் லாப வெறியும் போட்டி பொறாமையும் மனிதர்களை மதித்ததே இல்லை என்பதுதான் உண்மை. இங்கு கேள்வி நாம் ஒரு சமூகமாக அணு சக்தியை பயன்படுத்தும் பொறுப்பு உடையவர்களாக இருக்கிறோமா என்பதுதான்.
இந்த விபத்துக்கள் எல்லாமே மிக முன்னேறிய நாடுகளில் ஏற்பட்ட விபத்துக்கள். எடுத்துக்காட்டுக்கு செர்னோபிள் விபத்தில் வெளியேறிய மக்களுக்காக பல கோடிகளில் புதிய குடியிருப்புகளும், பள்ளிக் கூடங்களும், மருத்துவமனைகளும் இன்ன பிற நகர்ப்புற அத்தியாவசிய உள்கட்டுமானங்களும் புதிதாக கட்டியமைக்கப்பட்டன. உள்ளூரில் கிடைக்கும் மரத்தை எரித்தால் கதிரியக்கம் வரும் என்று நம்பியதால் இந்த இடங்களுக்கான எரிபொருள் தேவைக்காக 8,980 கிமீ நீளத்திற்க்கு புதிதாக எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டன. உள்ளிருந்தே சிதைக்கப்பட்டுக் கொண்டிருந்த சோசலிச கட்டுமானத்தைக் கொண்டு அன்றைய ரஸ்ய ஏகாதிபத்தியம் இவற்றை சமாளித்தது. இதே போன்ற விபத்து இந்தியாவில் ஏற்பட்டால் என்ன ஆகும்? இந்தியாவில் அணு உலைகள் மக்கள் வாழும் இடங்களின் அருகிலேதான் வைக்கப்பட்டுள்ளன- கல்பாக்கம் அணு உலை முதற் கொண்டு. இந்தியா தனது மக்களை எந்தளவிற்கு மதிக்கிறது என்பதற்க்கு ஆதாரங்கள் தேவையில்லை. அணு விபத்து அல்ல மாறாக ஒரு சாதரண ராசயண விபத்து இந்தியாவில் போபாலில் நிகழ்ந்தது. யூனியன் கார்பைடு என்ற அமெரிக்க உளவு கம்பேனி நடத்திய சோதனையின் விளைவாக ஆயிரக்கணக்கில்(அரசு சொல்வது – 3000 பேர், ஓரளவு நம்பத்தகுந்த விவரம் – 8000 பேர், ஒட்டு மொத்தமாக இது வரை கிட்டத்தட்ட 20,000 பேர் வரை) போபால் மக்கள் இறந்து போயினர். இன்று வரை இந்த அமெரிக்க கம்பேனியின் பொறுப்பாளர் எவனையும் கைது செய்யவோ தண்டனை கொடுக்கவோ இல்லை இந்த அரசு. இது வரை அந்த தொழிற்சாலை கழிவுகள் அகற்றப்படவில்லை. வாழும் வெடி குண்டாக அந்த தொழிற்சாலைக் கழிவுகள் நீர், நிலம், காற்றை நஞ்சாக்கி பல்வேறு உடல் கேடுகளை உருவாக்கி வருகிறது. இன்றுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நிவாரணம் தரப்படவில்லை. விசயம் இப்படி இருக்க யூனியன் கார்பைடு மீது உள்ள வழக்கை விலக்கிக் கொள்ள தயார் என்று முழங்குகிறார் மன்மோகன் சிங். இதுதான் இந்திய அரசு தனது மக்களை மதிக்கும் விதம். சென்னை அருகில் உள்ள கல்பாக்கம் அணு உலை உலகின் மிக அபாயகரமான உலைகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது, அடிப்படை குளிர்விக்கும் வசதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இல்லாத அணு உலை அது என்பது இங்கு கவனிக்கத்தக்கது #13.

அணு சக்தி என்பது மிக மிக அற்புதமானதொரு/அபாயகரமானதொரு சக்தி அதனை பயன்படுத்துவது என்பதற்க்கு குறைந்த பட்ச ஜனநாயக பண்பு கொண்ட சமூகத்தாலேயே முடியும் இல்லையேல் அது அபாயகரமானது. அணு சக்தி தயாரிப்பு தொழில் நுட்பம் குறித்து இப்போது பார்க்கலாம்.

No comments:

Post a Comment